சிங்கள தொலைக்காட்சி நாடகங்களும் நானும்..!

இலங்கையில் தொலைக்காட்சி என்ற பொழுதுபோக்கு ஊடகமும்,தொலைக்காட்சி பெட்டிகளும் அதிகளவாக அறிமுகமான காலகட்டம் அது. அதாவது 90களின் நடுப்பகுதி. அப்பொழுதே எங்கள் வீட்டிற்கும் தொலைக்காட்சி பெட்டி அறிமுகமாகியது.. அப்பொழுது இரண்டு அலைவரிசைகள்தான். ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை, இரண்டும் அரசுக்கு சொந்தமானவை. இன்றைய காலகட்டத்தில் கண்ட பக்கமெல்லாம் படங்களும் பாடல்களும் ஆனால் அன்று படங்களோ பாடல்களோ அவ்வளவு சுலபமாக பார்த்துவிடமுடியாது. இரண்டு சானல்களிலும் சிங்கள நிகழ்ச்சிகளே அதிகம் ஒலிபரப்பபடும். தமிழில் செய்திகள் மட்டும் தினம் ஒரு தடவை ஒளிபரப்பாகும்.

தமிழ்நிகழ்ச்சிகளை பொறுத்தவரை ரூபவாஹினியில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 2 மணி முதல் 3 மணி வரை இடம்பெறும் இதில் அரைநேரம் நாடகமும் மற்ற அரைநேரம் பாடல்களும் ஒளிபரப்பாகும். இந்த ஒரு மணிநேரத்தில் அனைவரும் தொலைக்காட்சி பெட்டி முன் தான். இதிலே பார்த்த நாடகங்களான. பாலச்சந்தரின் கையளவு மனசு,மனோரமா ஆச்சியின் அன்புள்ள அம்மா மறக்கமுடியாதவை. மற்ற அரை மணிநேரத்தில் 5 அல்லது 6 பாடல்கள் இடம்பெறும் இதைப்பார்க்க ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். இதிலும் ஒளிபரப்பிய பாடல்களையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவார்கள். தமிழ்த்திரைப்படங்களை பொறுத்தவரை ரூபவாஹினியில் மாதம் ஒரு முறையும் சுயாதீன தொலைக்காட்சியில் வாரம் ஒரு முறையும் ஒளிபரப்பாகும். இலங்கையில் படைக்கப்பட்ட தமிழ்நாடகங்கள்,பாடல்கள் வானொலியில் அதிக இடம் பிடித்திருந்தாலும். தொலைக்காட்சியில் அவ்வப்போது பொங்கள்,தீபாவளி தினங்களில் மாத்திரம் ஒளிபரப்புவார்கள்..

இவ்வாறான காலகட்டங்களிலேயே சிங்கள தொலைக்காட்சி நாடகங்கள் எனக்கு அறிமுகமாகியது. ஆரம்ப காலங்களில் சிங்கள மொழி அவ்வளவாக பரிச்சயமில்லையென்றாலும் அதன் நகரும் காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் போன்றவை மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன். மொழியை தாண்டி அவை புரியும்படியாகவும் இருந்தது. பின்னாட்களில் பாடசாலையில் சிங்கள பாடமும் இருந்ததால் அவை இலகுவில் புரிய ஆரம்பித்ததுடன். சிங்கள மொழியை கற்க இவ்வாறான தொலைக்காட்சி நாடகங்கள் பெரிதும் உதவியது.

இப்போதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்கள் என்றாலே அது பெண்கள் சார்ந்த விடயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கு அங்கே அனுமதியில்லை என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது.. இதற்கு தற்காலத்து நாடகங்களும் சான்றுதான். காரணம் அங்கே முழுதும் பெண்கள் ராச்சியம்தான். பெண்களே அதிகம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதால் அவர்களை கவர்வதற்கான உத்தியாகலாம் இது. இதனால் தொலைந்து போனது நாடகங்களின் தனித்தண்மை மட்டுமே, இதற்கான முழுப்பொறுப்பும் இந்திய தொலைக்காட்சிகளின் பக்கமே. (ஒரு சில நாடகங்களை தவிர்த்து உ+ம் மர்ம தேசம்) ஆனால் இலங்கையின் அப்போதைய நாடகங்கள் அவ்வாறில்லை. அது மனிதர்களின் சமகால வாழ்க்கையின் யதார்த்தங்களை நன்றாக பேசியது. அவர்களின் கலை,கலாச்சாரம்,வாழ்வியல் அதன் உண்மைகள் பொய்கள் மற்றும் மனிதர்களின் உண்மை முகங்களை ஒப்பனைகள் இல்லாமல் அவ்வாறே காட்டியது.

இரவு நேரம் பொதுவாக பிள்ளைகள் படிக்கும் நேரமாகையால், அப்பொழுது டீவி பார்ப்பதற்கு அனுமதியில்லை. ஆனால் நாடகங்கள் ஒலிபரப்பபடும் நேரமான இரவு 8.30 – 9.00 மட்டும் எங்கள் வீட்டில் அனுமதி உண்டு. காரணம் அந்த நாடகங்களின் தரம், அவற்றில் சொல்லப்படும் விடயங்கள். ஒரு நாடகம் வாரத்துக்கு ஒரு அங்கம்(எபிசோட்)  மட்டுமே ஒளிபரப்பாகும் அடுத்த எபிசோட்டை பார்க்க அடுத்த வாரம் வரை காத்திருக்கனும் அந்த காத்திருப்பும் ஒருவித இன்பம்தான். இவ்வாறு ஏழு நாட்களும் ஏழு நாடகங்கள் ஒளிபரப்பாகும். ஒரு சுவாரசியமான நாவலை படிக்க படிக்க எவ்வளவு சுவையாக இருக்குமோ அவ்வாறான உணர்வு இந்த நாடகங்களை பார்க்கும் பொழுது. காரணம் அதிகமான நாடகங்கள் பிரபலமான நாவல்களை தழுவியே எடுக்கப்பட்டது.

ஒரு நகரத்தில் வாழும் மனிதனுக்கு, கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் கிராமத்துக்கு சென்றுதான் பார்க்கவேண்டும் என்ற அவசியம் ஏற்படாதவாறு. கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்தது அவ்வாறான நாடகங்கள். அந்த கால கட்டத்தில் கிராமத்தை அடிப்படையாக வைத்தே அதிக நாடகங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அங்கே கிராமத்து மனிதர்களின் வாழ்க்கைமுறை,கல்வி முறை,நடை உடை பாவனை அத்தனையும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டது எந்தவித மிகைப்படுத்தலோ இல்லாமல்.
அப்போது பார்த்தவற்றில் இப்போது பல நாடகங்களின் பெயர்கள் நினைவிலில்லை. நினைவில் நிற்கின்ற சில தூதருவோ(பிள்ளைகள்), நேதேயோ(உறவினர்கள்), அம்மய் தாத்தய் (அம்மா அப்பா), எககெய குருள்ளோ(ஒரு வீட்டுப்பறவைகள்), இட்டிபஹன்(மெழுகுவர்த்தி),மடொல்துவ, அம்ப யாலுவோ(சிறுபராய நண்பர்கள்), பளிங்கு மெனிக்கே,தடுபஸ்னாமனய இதில் தமிழ்/சிங்கள கலவையில் உருவான யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “இவ்வழியால் வாருங்கள்” என்ற நாடகத்தையும் குறிப்பிடலாம். சுயாதீன தொலைக்காட்சி(ITN) யில் இரண்டு தசாப்தம் கடந்தும் “கோப்பி கடே” (டீக்கடை) என்றொரு நாடகம் இன்னும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இதிலே வாராவாரம் ஒவ்வொரு தலைப்பில் சமகாலத்தில் நடைபெறும் ஏதாவதொரு விடயத்தை பற்றி பேசுவார்கள் கொஞ்சம் நகைச்சுவையாக கொஞ்ச்ம சிந்திக்க கூடிய வகையில். அதில் நடிக்கதுவங்கிய பலரில் சிலர் இறந்தும்விட்டார்கள். ஆனால் முன்புபோலில்லாமல் அதன் தரம் குறைந்து கொண்டு வருகிறது.

தற்போதைய சிங்கள தொலைக்காட்சி தொடர்களை நோக்கினால அவை முன்பு போல் இல்லை. இன்றைய மேல்தட்டு மக்களின் வாழ்க்கையையும்,காதலையும்,இன்றைய நவ நாகரீக வாழ்க்கை முறையையும்தான் அதிகம் பேசுகிறது. ஒரு சில நாடகங்களை தவிர.காலங்கள் செல்ல செல்ல இன்றைய நடைமுறைக்கேற்றவாரு ரசனைகளையும் மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ.. இன்றைய வணிக உலகில் எது அதிகம் விரும்பபடுகிறதோ அதுவே அங்கே உருவாக்கவும்படுகிறது அது அபத்தமாகயிருந்தாலும்..!

டிஸ்கி- பதிவெழுத தொடங்கிய காலத்தில் எழுத நினைத்தது ஒன்றரை வருடம் கழிந்து இன்று நிறைவேறியுள்ளது.

Scroll to Top