ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்.. நிறம்மாறாத பூக்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று. சிறிய வயதில் இந்த படம் பார்த்தபோதும் வானொலியில் இந்தப்பாடலை பலமுறை கேட்டிருந்தபோதும் இதன் மேல் அவ்வளவு ஈர்ப்பு வந்ததில்லை.. அப்போது ஜேசுதாசையும் எஸ்பிபியையுமே அதிகம் ரசித்ததால் வேறு பாடகர்களின் பாடல்களை ரசிக்கவிடாமல் செய்திருக்கலாம்! அண்மையில் இளையராஜாவின் நிகழ்ச்சியொன்றில் சைலஜா அவர்கள் இந்தப்பாடலை பாடியதை கேட்டதிலிருந்து இந்தப்பாடலின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்.. அன்று முதல் இன்று வரை பலமுறை திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன் இந்தப்பாடலை. இளையராஜா மெல்லிய இசையால் மனதை வருடி காற்றிலே மிதக்க வைத்திருப்பார்.. மலேசியா வாசுதேவன், S.P.சைலஜா,ஜென்சி ஆகியோர் இனிமையாகவே பாடியிருப்பார்கள். இந்தப்பாடலைப்பற்றி சொல்லிவிட்டு இதன் வரிகளை எழுதியவர் பற்றி சொல்லாவிட்டால் என் ரசனை முழுமையடையாது.. எழுதியர் கவியரசு கண்ணதாசன். எப்படி இவரால் மட்டும் இப்படி முடிகிறது! என பல முறை நான் வியந்ததுண்டு.. இது ஒரு காதல் பாடல் என்ற போதிலும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு உணர்வை நம் மனதில் ஏற்படுத்தும். கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறலாம் எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ!! ஒரு காதல் பாடலில் இவ்வாறான வரிகளையும் எண்ணங்களையும் புகுத்தி அதையும் முனுமுனுக்க செய்திருக்கிறார்.. அதுதான் கண்ணதாசன்! "பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே மலையின் மீது ரதி உலாவும் நேரமே" அடடா!!!